அரசினர் மாணவியர் விடுதியில் அந்தியூர் எம்எல்ஏ திடீர் ஆய்வு
அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் எம்எல்ஏ வெங்கடாசலம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் அரசினர் மாணவியர் விடுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேற்று (30ம் தேதி) இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஈரோடு, கவுந்தப்பாடி, குமாரபாளையம், பாலமலை, பர்கூர் மடம், பெஜிலட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கி வரும் மாணவியர் விடுதியை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேற்று (30ம் தேதி) இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, மாணவிகளிடம் விடுதியில் போதிய அளவில் அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும், விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா எனவும் கேட்டறிந்து மாணவிகளின் தேவைகளை கேட்டறிந்தார்.
மேலும், விடுதிக்காப்பாளரிடம் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது பர்கூர் மலை கிராமம் கத்திரி மலை பகுதியை சேர்ந்த நாகம்மா என்ற மாணவி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் நினைவில் அழுது கொண்டே இருந்ததை கவனித்த சட்டமன்ற உறுப்பினர் கத்திரி மலை பகுதிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் பேச வைத்தார்.
மேலும், பெண்ணின் உறவினர்களிடம் விசாரித்த பொழுது இந்த மாணவியின் அண்ணன் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக இறந்து விட்டதாகவும், அவரது பெற்றோர்கள் கர்நாடக மாநிலத்தில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் அவரது பெற்றோரை தொடர்பு கொள்ள முடிந்தால் தொடர்பு கொண்டு மாணவியிடம் உடனடியாக தொலைபேசியில் பேசிவிட்டு மாணவியை நேரில் வந்து சந்தித்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், ஒன்றிய திமுக அவைத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.