அந்தியூர் குருநாதசுவாமி கோயிலில் பூச்சாட்டுதலுடன் ஆடி தேர் திருவிழா துவக்கம்
அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோயில் ஆடித் தேர்த் திருவிழா இன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர்த் திருவிழா இன்று (17ம் தேதி) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி, தென்னிந்திய அளவில் கால்நடை சந்தை கூடும்.
நடப்பாண்டு விழா இன்று (17ம் தேதி) காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக, புதுப்பாளையத்தில் உள்ள மடப்பள்ளியில் இருந்து குருநாதசுவாமி கோயில் வனத்துக்கு சுவாமி சிலை, கொண்டு செல்லப்பட்டது. அங்கு பூச்சாட்டுதல் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.
இதையடுத்து வரும் 25ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 31ம் தேதி முதல் வனபூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. அன்று முதல், தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற மாட்டுச் சந்தை, குதிரைச்சந்தை தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. ஆகஸ்ட் 14ம் தேதி பால் பூஜையுடன் ஆடித் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.