அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா 3-வது ஆண்டாக ரத்து
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா மற்றும் அதையொட்டி நடைபெறுகின்ற குதிரை சந்தை , பாரம்பரிய கால்நடை சந்தை பிரபலமானது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் சற்று அதிகரித்து வரும் நிலையில், திருவிழாவின் போது தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவர் என்பதால், கோபி கோட்டாட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருவிழாவை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் சிறப்பு பூஜைகள் மட்டும் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரைச் சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.