கோபிசெட்டிபாளையம் அருகே சந்தன மர கடத்தல் கும்பலின் கூட்டாளி கைது
கோபிசெட்டிபாளையம் அருகே சந்தன மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம், வேதபாறை நீர்த்தேக்க திட்டத்தின் அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு அடர்ந்த வனப்பகுதியில் இருந்த 25 ஆண்டு பழமையான 2.சந்தன மரங்கள் வெட்டி கடத்த கும்பல் ஒன்று முயற்சித்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு டி.என்.பாளையம் வனசரகர் கணேஷ்பாண்டியன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் விரைந்து சென்று கண்காணித்தனர்.
கும்பல் சந்தன மரங்களை வெட்டி அவற்றின் முக்கிய பகுதியான தண்டு பகுதியை துண்டு துண்டாக்கி கடத்தல்காரர்களுக்கு விற்க கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பகவதி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் பெரியசாமி (20) என்பவர் உட்பட 2 பேரை கைது செய்தனர். 8 கிலோ சந்தன கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், நரசாபுரம் பகுதியை சேர்ந்த பொம்மன் மகன் அய்யப்பன் (36) என்பவர்தான் சந்தன மரங்களை சட்டவிரோதமாக வாங்கி செல்வது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, தொடர்ந்து வியாபாரிகள் போல அய்யப்பனிடம் போனில் பேசிய வனத்துறையினர் சந்தனக் கட்டை இருப்பதாகவும், பங்களாப்புதூர் வந்தால் வாங்கி செல்லலாம் என்றும் கூறி உள்ளனர்.இதை நம்பி டூவீலரில் வந்த அய்யப்பனை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் டூவீலரில் 4 கிலோ சந்தன கட்டை இருப்பது தெரிய வந்தது.
அய்யப்பனை கைது செய்த வனத்துறையினர் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அம்ஜத் அலி என்பவருக்கு விற்பனை செய்து வருவதும், அவர் ஏற்கனவே சந்தன மரக்கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அந்தியூர்.அம்மாபேட்டை பகுதிக்கு ரகசியமாக வந்து சந்தன மரங்களை வாங்கி செல்வதாக திடுக்கிடும். தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.