ஈரோடு மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
ஈரோடு மாவட்ட அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி, கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.
ஈரோடு மாநகரத்தில் 6 ஆண்டுகளாக சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பேசி முடிக்காமல் இழுத்தடிக்கும் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய கூலி உயர்வை கொடுப்பதை உத்தரவாதப்படுத்த கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டம் ஈரோடு பார்க் ரோடு, ஸ்டார் தியேட்டர் அருகே நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாநகர் பகுதி அதிமுக செயலாளரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான பெரியார் நகர் இரா.மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் செயலாளருமான கே.எஸ். தென்னரசு கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில் சிஐடியு சுமைப்பணி தலைவர் டி.தங்கவேல், சிஐடியு சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தலைவர் ஏ.விஜயகுமார், கௌரவத்தலைவர் எஸ்.ஆர்.ராஜு, இபிடிஎஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகம், அதிமுக சுமை தூக்குவோர் மாவட்ட துணைத்தலைவர் மாதையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். போராட்டத்தில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.