ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை தவிர்க்கிறதா அதிமுக?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கூட்டணி கட்சியான பாஜகவை அதிமுக தவிர்த்து வருகிறது.;
பைல் படம்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கூட்டணி கட்சியான பாஜகவை அதிமுக தவிர்த்து வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருந்தது. ஆனால், முதல்நாள் தேர்தல் பிரசாரத்தில் மட்டுமே தலைகாட்டிய பாஜக நிர்வாகிகள் அதன் பின்னர் ஒதுங்கிக் கொண்டனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக வேட்பாளர் தென்னரசு மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. பிரசாரத்தில் பங்கேற்கும் பாஜகவினரும் கொடி ஏதுமின்றி அடையாளம் தெரியாமல் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமாகா நிர்வாகிகள் பிரச்சார கூட்டத்தில் ஒன்றாக கலந்துகொள்கின்றனர்.
ஆக, இதன் மூலம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவை அதிமுக தவிர்த்து வருவது உறுதியாகியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து, இத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக கூட்டணி சார்பில் கே. எஸ்.தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் தற்போது களை கட்ட தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.