ஈரோடு மாவட்டத்தில் அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-21 02:13 GMT

கட்டாய கல்வி உரிமைச் சட்டம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு நாளை (22ம் தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2024-2025ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தனியார் சுய நிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு சேர்க்கைக்கு rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் நாளை (22ம் தேதி) முதல் வருகிற மே மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எல்கேஜி அல்லது 1ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க வீட்டு முகவரியில் இருந்து சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பள்ளி 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

குழந்தையின் பெற்றோர் இணைய வழியில் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும், முதன்மை கல்வி அலுவலகம், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 வட்டார கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது, குழந்தையின் சமீபத்திய புகைப்படம் பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச்சான்று (பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ்) போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் மற்றும் வருமானச்சான்று தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, பெற்றோர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News