ஈரோடு மாவட்டத்தில் 46 தானியங்கி மழைமானிகள் அமைக்க நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் 46 தானியங்கி மழைமானிகள் மற்றும் 2 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-27 06:00 GMT

மொடக்குறிச்சி 'ஆ' கிராமத்தில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 46 தானியங்கி மழைமானிகள் மற்றும் 2 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவினை கணக்கிடும் பொருட்டு புதிதாக 46 தானியங்கி தானியங்கி மழைமானிகள் மற்றும் 2 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவுவதற்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக தானியங்கி மழைமானி அமைக்கும் வகையில் மொடக்குறிச்சி "ஆ" கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தானியங்கி மழைமானியை சுற்றி கம்பிவேலி அமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதிலும் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி ஆகிய இடங்களில் தலா 3, பெருந்துறை, தாள வாடி, அந்தியூர் தலா 6, கோபிசெட்டிபாளையம் 4, சத்தியமங்கலம் 10, நம்பியூர் 2 என மொத்தம் 46 புதிதாக தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படவுள்ளது.

மேலும் தானியங்கி வானிலை மையம் மொடக்குறிச்சி, தாளவாடி தலா 1 என மொத்தம் 2 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டமானது ஈரோடு மாவட்டத்தில் விரைவில் முடிக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படும் தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News