ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த பணியாளர் மீது நடவடிக்கை: இணை இயக்குநர் தகவல்..!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூக்கு படுக்கையின்றி (ஸ்ட்ரெச்சர்) தாயை மகள் தூக்கி சென்ற விவகாரத்தில் ஒப்பந்த பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூக்கு படுக்கையின்றி (ஸ்ட்ரெச்சர்) தாயை மகள் தூக்கி சென்ற விவகாரத்தில் ஒப்பந்த பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் சொர்ணா (வயது 75). இவருக்கு காலில் காயம் ஏற்பட்ட காரணமாக, அவரது மகள் வளர்மதி தாய் சொர்ணாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கடந்த 27ம் தேதி மதியம் அழைத்து வந்தார். அப்போது, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
வளர்மதி தனது தாயை எக்ஸ்ரே பிரிவுக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தார். இதைத்தொடர்ந்து சொர்ணாவுக்கு காலில் வலி ஏற்பட்டது. இதனால், அங்கு தூக்குபடுக்கையுடன் வந்த பணியாளரிடம் தனது தாயை தூக்குபடுக்கையில் வைத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த பணியாளர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வளர்மதி அவரது தாய் சொர்ணவை தூக்கி கொண்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ஈரோடு அரசு மருத்துவமனையில் தூக்குபடுக்கை இல்லாத அவலம் பதிவிட்ட நிலையில், இந்த காட்சி வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் நோட்டீஸ் வழங்கினார். தொடர்ந்து, மருத்துவமனை நுழைவாயில் எப்போதும் நோயாளிகளுக்கு தேவைப்படும் வகையில் தூக்குபடுக்கை மற்றும் சக்கர நாற்காலி இருக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோரிடமும், மருத்துவமனையில் தூக்குபடுக்கையின்றி தாயை சுமந்து சென்ற வளர்மதியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, அறிக்கையை பெற்றார். அந்த அறிக்கையின் அடிப்படையில் மருத்துவ உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் கூறுகையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் தூக்குபடுக்கையின்றி தாயை தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகளிடமும் விளக்கம் பெற்றுள்ளேன். இந்த அறிக்கையை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி அவர்களுடைய உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
இந்த பிரச்சினைக்கு காரணம் தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர் என்பது உறுதியாகி உள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுக்கிறார். இருப்பினும் அவர் மீது கட்டாயம் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.