அந்தியூரில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கடையின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட தமிழ்பாண்டியன்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜி.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (38). கடந்த 10ம் தேதி இவர், அந்தியூர்-பவானி சாலையில் உள்ள இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது, இரு வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அந்தியூர் போலீசார் அண்ணாமடுவு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே உள்ள நெருப்பூர் பகுதியை சேர்ந்த மருதப்பன் மகன் தமிழ்பாண்டியன் (28) என்பதும், மோகன்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.