அந்தியூர் அருகே வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.
அந்தியூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள பெஜலெட்டி காலனியைச் சேர்ந்தவர் மாதன் என்கிற சுந்தரம் (வயது 51). தொழிலாளி. இவர் ஏராளமான கால்நடைகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் மாதன் பர்கூர் மலைப்பகுதியில் பொன்னாச்சி அம்மன் கோவில் அருகே மாடுகள் மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பொன்னாச்சி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த மாதனை பார்த்ததும் ஆவேசம் அடைந்த யானை அவரை துரத்தி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த மாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, பர்கூர் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் யானை அங்கிருந்து செல்லாமல் ஆக்ரோசமாக நின்று கொண்டிருந்தது. அதற்குள் இரவு ஆனதால் மாதனின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அவரது உடலை மீட்காமல் வனத்துறையினர் மற்றும் போலீசார் திரும்பி வந்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை பர்கூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் அந்தியூர் வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், அங்கிருந்த மாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.