சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் பயிருக்கு காவல் இருந்த பெண்ணை யானை மிதித்து கொன்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதி கானக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜடையப்பன் (60). இவரது மனைவி மாதம்மாள் (வயது 55). இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இருவரும் தினமும் இரவில் உருளைக்கிழங்கு பயிருக்கு காவல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் காவலுக்குச் சென்ற இருவரும் விவசாய நிலத்தில் அமைத்து இருந்த குடிசையில் தங்கி இருந்தனர். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டு யானை விளை நிலத்தில் புகுந்து உருளைக்கிழங்கு பயிர்களை சேதப்படுத்தியது. காட்டு யானையை கண்ட ஜடையப்பன் மற்றும் மாதம்மாள் இருவரும் யானையை விரட்ட முயற்சித்தபோது காட்டு யானை இருவரையும் துரத்தியது. அப்போது காட்டு யானை தும்பிக்கையால் மாதம்மாளை பிடித்து தாக்கி காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சத்தம் கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கேர்மாளம் வனத்துறையினர் மற்றும் ஆசனூர் காவல்துறை யினர் சம்பவ இடம் வந்து மாதம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பயிருக்கு காவல் இருந்த மூதாட்டி காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.