பவானிசாகர் அணை பூங்காவிற்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை
பவானிசாகர் அணை பூங்காவிற்குள் இன்று அதிகாலை நுழைந்த காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு அடிக்கடி வருவது வழக்கம்.
இதற்கிடையே இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பவானி சாகர் அணை முன்புறம் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்காவிற்குள் நுழைந்து நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தைக் கண்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
இதனையடுத்து, பூங்காவில் இருந்து பிரதான நுழைவு வாயில் வழியாக வெளியேறிய காட்டு யானை பூங்கா முன்புறம் உள்ள பவானி சாகர்- பண்ணாரி சாலையில் ஊருக்குள் புகுந்து அங்கும் இங்கும் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
மேலும், பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே இருந்த கடையின் ஷட்டரை தனது தும்பிக்கையால் திறக்க முயற்சித்தது. கதவை திறக்க முடியாத தால் சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. பகல் நேரங்களில் ஊருக்குள் நட மாடும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.