கவுந்தப்பாடி அருகே தீ பிடித்து எரிந்த டிப்பர் லாரி
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது.
கவுந்தப்பாடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஈரோடு - கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் கவுந்தப்பாடி அடுத்த பாலப்பாளையம் அருகே சுங்கச்சாவடி மற்றும் 4 வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி அதை கொட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது, திடீரென லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
தொடர்ந்து, லாரியில் தீ வேகமாக பற்றி எரியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, லாரியில் இருந்த டீசல் டேங்க் வெடித்து தீ மேலும் அதிகமாக பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு லாரியில் எரிந்த தீ அணைக்கப்பட்டது.
ஆனாலும், லாரியின் முன்பகுதி எரிந்து சேதமானது. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், லாரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நேரிட்டது தெரிந்தது.