பவானி அருகே அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்
பவானி அருகே உள்ள கேசரிமங்கலத்தில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச்சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்ய வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கேசரிமங்கலத்தில் மேட்டூர் அணையிலிருந்து அதிகமான உபரி நீர் திறந்து விடப்பட்டதால் காவேரி ஆற்றங்கரை அருகில் உள்ள கிராமங்களில் கோபி வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஊமாரெட்டியூர் பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிக்கு லாரியில் கிராவல் மண் எடுத்துச் சென்ற வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தபோது 9-11-2020 முதல் 8-11-2025 வரை சாதாரண கல் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், அனுமதி இன்றி 3.5 யூனிட் கிராவல் மண் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அரசு கனிம விதிகளுக்கு புறம்பான செயல் என்பதால் வருவாய்த் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதன் பின்னர் பவானி வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பேரில் பவானி காவல் நிலைய போலீசார் உரிமையாளர் சேகர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.