ஈரோட்டில் தனியார் கடையின் குடோனில் பயங்கர தீ விபத்து: விண்ணை தொட்ட கரும்புகை
Erode news- ஈரோட்டில் தனியார் பைப் கடையின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகி இருப்பதாக கருதப்படுகிறது.
Erode news, Erode news today-ஈரோட்டில் தனியார் பைப் கடையின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகி இருப்பதாக கருதப்படுகிறது.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே சத்தி சாலையில் பரணி பைப்ஸ், டியூப்ஸ் என்ற மொத்த விற்பனை கடையை ராவணன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கடையின் பின்புறம் பெரிய அளவில் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. இதில், வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
இந்நிலையில், இன்று (11ம் தேதி) காலை சுமார் 10 மணியளவில் வழக்கம் போல் கடையில் ஊழியர்கள், வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கடையின் ஒரு இடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைக்கும் முயற்சியில் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது. இதனால் கரும்புகை விண்ணை தொடும் அளவில் வெளியேறியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியதால் கூடுதலாக ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி என 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கரும்புகை 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு பரவியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
தொடர்ந்து, தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால், குடோனின் சுவர்கள் இடித்து இடித்து தீயணைக்கும் பணி நடைபெற்றது. இதற்கிடையில் தீ விபத்தை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் அதிக அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனிடையில், தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு எம்பி பிரகாஷ் எம்பி, எம்பி அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம் உட்பட அரசு அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின், இரவு 10 மணிக்கு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ரூ.10 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்ததாக கருதப்படுகிறது. மேலும், கடை முழுவதும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.