ஜப்பானுக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய ஈரோடு வெள்ளித்திருப்பூர் அரசு பள்ளி மாணவி

Erode news- ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் முகாசிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி கோபிகா ஸ்ரீ, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டார்.

Update: 2024-06-26 06:15 GMT

Erode news- ஜப்பான் நாட்டில் மாணவ, மாணவியர்களுடன் மாணவி கோபிகா ஸ்ரீ.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் பூனாச்சி பகுதியைச் சேர்ந்த கோபிகா ஸ்ரீ. இவர், அம்மாபேட்டை ஒன்றியம் முகாசிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்றவர். இவர் 2022-2023 நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இம்மாணவி அம்மாபேட்டை கஸ்தூரிபா காந்தி வித்யாலயா பெண்கள் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் ஆகும்.

ஒரு நாட்டின் கல்வி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 44 விடுதிகளில் தங்கி 10ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.


அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 விடுதிகளில் தங்கி பயிலும், மாணவியர்களில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியர்களை ஜப்பான் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், கஸ்தூரிபா காந்தி வித்யாலயா பெண்கள் விடுதியில் தங்கிப்பயின்ற மாணவியர்களில் முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி கோபிகா ஸ்ரீ, ஜப்பான் நாட்டிற்கு செல்லும் வாய்ப்பினை பெற்றிருந்தார்.

தமிழ்நாட்டிலிருந்து பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஜப்பான் நாட்டிற்கு செல்ல ஈரோடு, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தேர்வான 3 மாணவியர்களில் இவர் முதலிடத்தை பெற்றிருந்தார். தற்பொழுது மாணவி கோபிகா ஸ்ரீ, அம்மாபேட்டை ஒன்றியம் வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு உயிரியல்-கணிதப்பிரிவில் பயின்று வருகின்றார்.

மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 21 மாணவ, மாணவியர்கள் ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளனர். சென்னையிலிருந்து மாநில திட்ட இயக்கத்தின் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளனார். மாலத்தீவுகள், வியட்நாம், கஜகஸ்தான் மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். சக்குரா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமத்தின் சார்பில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டது.

ஜூன் 16 முதல் 22ம் தேதி வரை ஜப்பான் நாட்டில் தங்கியிருந்து அந்நாட்டின் கல்வி மற்றும் இதர அறிவியல் தொழில்நுட்பங்களை கற்றறிந்தனர். ஈரோடு மாவட்ட ஒருங்கிணைத்த பள்ளிக்கல்வி மூலம் மாணவியருக்கு தேவையான உதவிகள் பல தொண்டு நிறுவன அமைப்புகளில் இருந்து பெற்று தரப்பட்டது.

ஜப்பானின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பல்வேறு கருத்தரங்கங்கள், அறிவியல் ஆராய்ச்சி நிகழ்வுகள், ஜப்பானின் கலை பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையில் கடந்த 23ம் தேதியன்று அனைவருக்கும் கல்வி இயக்கக மாநிலத் திட்ட இயக்குனரை சந்தித்த பின் தனது சொந்த ஊர் திரும்பி உள்ளனர். ஜப்பான் நாட்டிற்கு சென்று வந்த அனுபவத்தை மாணவி கோபிகா ஸ்ரீ தெரிவிக்கையில், நான் மாணவ, மாணவியர்களோடு ஜப்பான் நாட்டிற்கு பயணம் செய்தபோது அந்நாட்டிலுள்ள நகோயா பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சென்றார்கள். அப்போது அங்கு பிளாஸ்மா எனும் பாடம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையினை பார்வையிட்டோம்.

அதில் மாணவ, மாணவியர்களுக்கு நேரடியாக தாங்களே பதில் அறிந்து கொள்ளும் அளவிற்கு பாடம் நடத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் அருங்காட்சியத்திற்க அழைத்து சென்றார்கள். அங்கு பல்வேறு நாடுகளின் பழமையான இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், புகைவண்டி ஆகியவற்றை பார்வையிட்ட அனுபவம் முற்றிலும் புதிதாக இருந்தது.

மேலும் ஜப்பான் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்து கொண்டேன். இத்தகைய அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சரும், பள்ளிக்கல்வித் துறைக்கும் எனது சார்பிலும், என்னோடு பயணம் மேற்கொண்ட மாணவ, மாணவியர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மாணவி கோபிகா ஸ்ரீக்கு ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News