கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே இன்று (திங்கட்கிழமை) மலைக் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கடம்பூர் அருகே இன்று (திங்கட்கிழமை) மலைக் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில் மனித உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சி எக்கத்தூர் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது. இதை கண்டு அப்பகுதி ஊர்ப் பொதுமக்கள் சத்தமிட்டதால், அந்த யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஓடியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வன எல்லையில் உள்ள அகழிகளை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.