அந்தியூரில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

வியாபாரம் செய்வதற்காக அந்தியூர் வந்திருந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டநிலையில் 108 ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது

Update: 2024-06-21 02:00 GMT
108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தையுடன் அவசர கால மருத்துவ நுட்புணர் ஆனந்தகுமார், செவிலியர் வனிதா ஆகியோர் உள்ளதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள திங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சுகன்யா (வயது 22). இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அந்தியூருக்கு வியாபாரம் செய்வதற்காக  இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது, கர்ப்பிணி சுகன்யாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால், அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சுகன்யாவுக்கு இதய நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். உடன் செவிலியர் ஒருவரும் புறப்பட்டார்.

அந்தியூர் அருகே பருவாச்சி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது சுகன்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால், ஓட்டுநர் வெங்கடாசலம் ஆம்புலன்சை நிறுத்தினார். பின்னர், சுகன்யாவுக்கு செவிலியர் வனிதா, அவசர கால மருத்துவ நுட்புணர் ஆனந்தகுமார் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில், அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து தாயும், சேயும் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில், நலமுடன் உள்ளனர்.

உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்ட செவிலியர் வனிதா, அவசர கால மருத்துவ நுட்புணர் ஆனந்தகுமார் மற்றும் ஓட்டுநர் வெங்கடாசலம் ஆகியோரை 108 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் மற்றும் சுகன்யாவின் உறவினர்கள் பாராட்டி நன்றி கூறினர்.

Tags:    

Similar News