கோபி அருகே வீட்டில் உடும்பு கறி சமைத்து சாப்பிட முயன்றவர் கைது
கோபி அருகே வீட்டில் உடும்பு கறி சமைத்து சாப்பிட முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர்.;
கோபி அருகே டி.என்.பாளையம் வனப்பகுதியில் உடும்பு கறி சமைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, புலி, உடும்பு, பாம்பு என பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவற்றை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறாக ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது கொங்கர்பாளையம் வெள்ளங்கரடு பகுதியில் உடும்பு கறி சமைக்கப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், வனத்துறையினர் வெள்ளங்கரடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சத்தி குத்தியாளத்தூர் கிராமம் பத்திரிபடுகையைச் சடையப்பன் (வயது 37) என்பவர் உடும்பு கறி சமைத்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், நயினாறப்பன் கரடு பகுதியில் உள்ள ஓடை வனப்பகுதியில் கம்பியால் கன்னி வலை வைத்து உடும்பை வேட்டையாடியது சமைத்து உண்ண முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் அவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து உடும்பு கறி, 4 சிறிய கன்னிகள், முயல் கன்னி, வெட்டுக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.