கோபி அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்த அரசு அலுவலர் கைது!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணின் கழுத்தை நெரித்து கொள்ளையடிக்க முயன்ற அரசு அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணின் கழுத்தை நெரித்து கொள்ளையடிக்க முயன்ற அரசு அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் அருகே உள்ள கேத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 64). இவர் எல்ஐசியில் முகவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காஞ்சனா (வயது 57) என்ற மனைவியும், ஸ்ரீதர் (வயது 35) மற்றும் சுகந்த் (வயது 33) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். ஸ்ரீதர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்திலும், சுகந்த் அருகில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு, நடராஜ் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், அவரது மனைவி காஞ்சனா வெளி அறையிலும், இரண்டு மகன்களும் வெவ்வேறு அறைகளிலும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, வீட்டு காம்பவுண்டுக்குள் முகமூடி அணிந்து உள்ளே புகுந்த கொள்ளையன், வீட்டின் கதவை திறக்க முயற்சித்து உள்ளான். அப்போது கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருக்கவே, கொள்ளையன் கதவு திறக்கும் வரை காத்திருந்ததாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து நடராஜ் அதிகாலையில் கதவைத் திறந்து வெளியே சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் திடீரென வெளியில் பதுங்கி இருந்த கொள்ளையன் வீட்டின் உள்ளே சென்றபோது, அறையில் தூங்கிக் கொண்டிருந்த காஞ்சனா கொள்ளையனைப் பார்த்துச் சத்தமிட்டுள்ளார். இதனால், காஞ்சனா முகத்தைத் துணியால் அழுத்தியும், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றான். காஞ்சனாவின் சத்தம் கேட்டு அறையில் தூங்கிக்கொண்டு இருந்த சுகந்த் வந்து பார்த்தார். அப்போது, கொள்ளையன் தாயின் கழுத்தை நெரித்துக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்குள் நடராஜனும் வருவதை அறிந்த கொள்ளையன், வீட்டை விட்டு வெளியேறி தப்பியோடினான்.
இது குறித்து நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தூர் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவளைத்து சோதனை செய்து தடயங்களைச் சேகரித்தும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் தயானந்த் (வயது 31) என்பவர் கொள்ளையன் வந்து சென்ற சிறிது நேரத்தில் நடராஜ் வீட்டிற்கு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் சிறுவலூர் அருகே உள்ள மாமனார் வீட்டில் இருந்த தயானந்திடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் டெக்.எம். படித்துள்ள தயானந்த் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டகலைத்துறை அலுவலக இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவது வந்ததும், இவருக்கும் சிறுவலூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றதும், இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. மேலும், தயானந்த் கோத்தகிரியில் மானிய தொகை மற்றும் அரசு மானியம் பெற்றுத்தருவதாக பல விவசாயிகளிடம் சுமார் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையறிந்த தோட்டகலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை 3 மாத காலத்திற்குள் திருப்பி வழங்க தயானந்திற்கு காலக்கெடு விடுத்துள்ளனர்.
இதனிடையே , நடராஜ் சொத்து ஒன்றை விற்பனை செய்து ரூ.90 லட்சம் இருப்பதாக தயானந்திற்கு தெரியவந்தது. தயானந்த் இந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக நடராஜ் வீட்டிற்கு சென்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தயானந்தை கைது செய்த போலீசார் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.