ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால் அச்சம்

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

Update: 2024-04-25 09:53 GMT

அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை.

கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள், அவ்வப்போது உணவுக்காக இடமாறும் போது, கடம்பூர் மலைக்கிராமங்கள் வழியாக செல்லும் சாலைகளை கடந்து செல்லும்.

சாலையோரம் உள்ள மூங்கில் செடிகள், பழ மரங்களை தேடி வருவதுண்டு, இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர்- காடகநல்லி வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்பு நின்று வழிமறித்தது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். பேருந்தில் இருந்த சில பேர் யானை பேருந்தை வழிமறித்து நின்ற காட்சியை வீடியோ பதிவு செய்தனர். சிறிது நேரம் அங்குமிங்கும் போக்கு காட்டிய காட்டு யானை சிறிது நேரம் கழித்து சாலையின் ஓரமாக சென்று வனப்பகுதிக்குள் மறைந்தது. யானை வனப்பகுதியில் சென்ற பிறகு அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை அங்கிருந்து கிளப்பினார். அதன் பிறகே அச்சத்துடன் இருந்த பயணிகள் பெருமூச்சு விட்டனர்.

Tags:    

Similar News