சத்தியமங்கலம் அருகே காட்டாற்று சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றை கடந்த போது 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேற்றில் சிக்கிய அரசு பேருந்து ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.

Update: 2023-03-27 11:15 GMT

சேற்றில் சிக்கிய அரசு பேருந்து.

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றை கடந்த போது 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்து ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம், கோவிலூர், அரிகியம், கோம்பை தொட்டி, கோம்பையூர் கிராமங்களில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.

வன கிராமங்களை சேர்ந்த மக்கள் அடர்ந்த வனப்பகுதி வழியாக கரடுமுரடான மண் சாலையில் வனப்பகுதியில் ஓடும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகளை கடந்து கடம்பூர் மற்றும் சத்தியமங்கலத்திற்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் வன கிராமத்திற்கு 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து, வனப்பகுதியில் உள்ள சர்க்கரை பள்ளம் காட்டாற்றை கடந்த போது, பஸ்சின் சக்கரம் சேற்றில் புதைந்து நகர முடியாமல் நின்றது.

இதையடுத்து, பேருந்தில் இருந்து பயணிகள் மற்றும் மலை கிராம மக்கள் கீழே இறங்கி பள்ளத்தில் இருந்த கற்களை எடுத்து சக்கரங்களுக்கு அடியில் போட்டு பேருந்தை தள்ளி மீட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால், மலை கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News