ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப் பதிவு

வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க 24 ஆயிரத்து 150 சேலைகளை பதுக்கி வைத்திருந்ததாக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது சித்தோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-03-27 14:00 GMT

குடோனில் பதுக்கி வைத்திருந்த சோலை பண்டல்கள்.

வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க 24 ஆயிரத்து 150 சேலைகளை பதுக்கி வைத்திருந்ததாக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது சித்தோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பிற்கு தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள், வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சி-விஜில் செயலியில் புகார் பதிவானது. அதில் ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையம்-கவுந்தப்பாடி சாலை, அண்ணாநகர் வீதியில் ஒரு கிடங்கில் உரிய ஆவணங்களின்றி பண்டல் பண்டலாக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதன் பேரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் நேற்று அப்பகுதிக்கு விரைந்தனர்.

இந்த ஆய்வில் அங்கு இருந்த ஒன்பது லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 161 பண்டல்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ஒரு பண்டலுக்கு 150 சேலைகள் வீதம் 161 பண்டல்களில் மொத்தம் 9 லட்சத்து 24,150 சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கிடங்கு உரிமையாளரான காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரனிடம் விசாரித்தபோது, கடந்த 20 நாட்களுக்கு முன் ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் என்பவர் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கு இந்த சேலைகளை வாங்கி கொடுத்தார்.

அதனை லாரியில் ஏற்றி வந்து இங்கு இறக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாமல், வாக்காளர்களுக்கு சேலைகளை பரிசாக வழங்க பதுக்கி வைத்திருந்ததாக அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், கட்டட உரிமையாளரான ரவிச்சந்திரன், ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் ஆகிய 3 பேர் மீது 171(இ) ஐபிசி பிரிவின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 9 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 161 பண்டல்களில் இருந்த 24,150 சேலைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News