சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்கு

பவானி பகுதியில் 7 வயது சிறுமியை சூடு வைத்து துன்புறுத்தியதாக பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-03-03 10:37 GMT

வழக்குப்பதிவு.

பவானி பகுதியில் 7 வயது சிறுமியை சூடு வைத்து துன்புறுத்தியதாக பெற்றோர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியின் உறவினர்கள், கடந்த 19ம் தேதி, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலகத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது, 7 வயது சிறுமியை அவரது பெற்றோர்கள் அடித்து துன்புறுத்துவதாக புகார் கூறினர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய மேற்பார்வையாளர் பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பவானியை அடுத்த ஊராட்சி கோட்டையை சேர்ந்த ஆன்மீக போதகர் குணசேகரன் என்பவர் குழந்தையை நல்வழிப்படுத்துவதாக கூறி, குழந்தையின் பெற்றோர் மற்றும் தனது மனைவியுடன் சேர்ந்து, சிறுமியை அடித்து, சூடு வைத்துள்ளனர். மேலும், உணவு தராமல் இரவு நேரத்தில் ஆன்மீக வகுப்பு நடத்தி துாங்கவிடாமல், சிறுமியின் துணிகளை துவைக்க வைத்து, பாத்திரத்தை கழுவ செய்தும், விளையாட விடாமல், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய மேற்பார்வையாளர் பிரியதர்ஷினி கொடுத்த புகாரின் பேரில், பெற்றோர் மற்றும் ஆன்மீக போதகரான குணசேகரன், அவரது மனைவி வர்ஷா மகத் அதிதி ராஜமாதா ஆகியோர் மீது, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்த சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து போலீசார் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News