ஈரோட்டில் பெற்ற தாயை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த சிறுவன்
Erode News Today -ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அருகே சரிவர படிக்காத மகனை கண்டித்த தாயை, தூங்கி கொண்டிருந்த போது தலையில் கல்லை போட்டு கொலை செய்த சிறுவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
Erode News Today -ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன்பாளையம் அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். காண்ட்ராக்டர். இவரது மனைவி யுவராணி (36). இவர் டானா புதூரில் உள்ள மின்வாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். மகள், புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், பள்ளியில் சரிவர படிக்காத சஞ்சயை அவரது தாய் யுவராணி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்த சஞ்சயை, அவரது தாய் தந்தை கண்டித்து வந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைையடுத்து நேற்று யுவராணியின் கணவர் அருள்செல்வன் வேலை விஷயமாக, கோயம்புத்தூர் சென்று விட்டார். அப்போது வீட்டில் யுவராணி தனது மகன், மகளுடன் இருந்தார். இரவு 8.30 மணி அளவில் யுவராணி தனது மகனிடம், 'நாளை காலை உனது தந்தையிடம் சொல்லிவிட்டு, உன்னை பள்ளி விடுதிக்கு அழைத்து செல்ல போகிறேன்,' என்று கூறியுள்ளார். இதனால் அவரது மகன் யுவராணியிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் இரவு வீட்டில் யுவராணி, மகன் சஞ்சய், மகள் தர்ஷனா ஸ்ரீ மூன்று பேரும் படுத்து துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சஞ்சய் தாய் மீது இருந்த ஆத்திரத்தில், தனது தாயை 'ஹாலோபிளாக்' கல்லை எடுத்துவந்து, தாய் யுவராணியின் தலைமீது கல்லை போட்டதில் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி கிடந்தார். அப்போது அவரது மகள் தர்ஷினி ஸ்ரீ சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். நடந்த சம்பவத்தை அறிந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தாயின் கல்லை போட்ட சிறுவன், மக்கள் திரண்டதை பார்த்து பீதியில், அங்கிருந்து தப்பியோடி விட்டான். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொடுத்த தகவலை அடுத்து, அங்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் யுவராணியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே யுவராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் எஸ்.பி சசிமோகன் உத்தரவின் பேரில், சத்தியமங்கலம் டி.எஸ்.பி.சந்திரசேகர், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் கொலை நடந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் யுவராணி வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய யுவராணியின் மகன் சஞ்சய் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற தாயை, மகனே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2