சத்தியமங்கலம் அருகே 97 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே 97 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-27 05:45 GMT

கைது செய்யப்பட்ட மூவர்.

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவின்பேரில், மாவட்ட எஸ்பி ஜவகர் தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில், காவலர்கள் அடங்கிய தனிப்படை பிரிவு போலீசார் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் வி.என்.எஸ். நகர் பகுதியில், இன்று (27ம் தேதி) நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். கடைக்குள் 1 கிலோ கஞ்சா, மற்றும் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 97 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து மளிகை கடை நடத்தி வந்த 3 பேரிடம் விசாரித்தபோது, கடை நடத்தி வந்த அபூபக்கர் (50), முகமது இட்ரோஸ் (27), ஷேக் அப்துல்லா முஹம்மது (27) ஆகிய மூன்று பேரும் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா, போதை பாக்கு மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை பறி முதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News