78வது சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
Erode News- ஈரோட்டில் நடந்த 78வது சுதந்திர தின விழாவில் 31 பயனாளிகளுக்கு ரூ.22.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கி, சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளை கவுரவித்தார்.
Erode News, Erode News Today- ஈரோட்டில் நடந்த 78வது சுதந்திர தின விழாவில் 31 பயனாளிகளுக்கு ரூ.22.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கி, சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளை கவுரவித்தார்.
ஈரோடு அடுத்த 46 - புதூர் ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15ம் தேதி) நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை அவர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட 17 சுதந்திர போராட்ட தியாகிகள், 63 மொழிப்போர் தியாகிகள், 6 எல்லைக் காப்பாளர்கள் என 86 சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார். இதனையடுத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த 92 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, 31 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 60 ஆயிரத்து 352 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதனையடுத்து, கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற 8 பள்ளிகளைச் சார்ந்த 515 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், இணை ஆணையர் (மாநில வரி, ஈரோடு கோட்டம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜாரணவீரன், விவேகானந்தன், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட காவல் துறையினர், அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.