ஈரோடு மாவட்டத்தில் 38 பயனாளிகளுக்கு ரூ.65.31 லட்சம் மானியத்துடன் கடனுதவி
ஈரோடு மாவட்டத்தில் 38 பயனாளிகளுக்கு ரூ.65.31 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு ரூ.65.31 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டமானது, (CM-ARISE) கீழ் 2023-24ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்கள் விருப்பமான, முன் அனுபவம் உள்ள தொழில் புரிந்து வருவாய் ஈட்டி பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேறும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். கடன் மற்றும் மானியம் கோருபவர்கள் தொழிலில் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். துவங்க உத்தேசித்துள்ள தொழிலை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும். திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடுபத்திற்கும் அதிகபட்சமாக 35 சதவீதம் அல்லது ரூ.3.50 லட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 38 பயனாளிகளுக்கு ரூ.65.31 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2024-25-ம் ஆண்டு 50 பயனாளிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM- ARISE) கீழ் ஈரோடு மாவட்டம், லக்காபுரம் கிராமத்தில் வசிக்கும் காந்திமதி என்பவருக்கு ரூ.2.45 லட்சம் தாட்கோ மானியமும் ரூ.4.55 லட்சம் வங்கி கடனுடன் சேர்த்து ரூ.7 லட்சம் மதிப்பில் ஆய்வுக்கூடம் அமைத்திட மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளி காந்திமதி தெரிவிக்கையில் நான் ஈரோடு மாவட்டம், லக்காபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் 12-ம் வகுப்பும், மகன் 9-ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். நான் கடந்த இரண்டு வருடமாக மருத்துவ ஆய்வகம் நடத்தி வருகிறேன்.
நான் எனது கையில் இருந்த சிறிய தொகையினை வைத்து முதலில் ஆய்வகத்தினை ஆரம்பித்து நடத்தி வந்தேன். மேலும் ஆய்வகத்தினை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் கடனுதவி வேண்டி, தாட்கோ துறையில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தில் விண்ணப்பித்திருந்தேன்.
எனக்கு கடந்த ஜனவரி மாதம் ரூ.2.45 லட்சம் மானியத்துடன் ரூ.7 லட்சம் கடனுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழங்கப்பட்டது. இந்த தொகையினை கொண்டு, எனது ஆய்வகத்தினை விரிவு படுத்தியுள்ளேன். இந்த தொகை எனக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. எனது கணவரின் வருவாயை மட்டும் நம்பி இருக்காமல், எனது சொந்த உழைப்பில் எனது குடும்பத்தினை பார்த்துக் கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது.
எனது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கும் உதவியாக இருக்கும். மேலும் மாதந்தோறும் தவறாமல் கடன் தவணைத் தொகையினை செலுத்தி வருகிறேன். இத்திட்டத்தினை வழங்கி என்னை போன்ற படித்த இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.