அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த 6 மாத அவகாசம்: அமைச்சர் முத்துசாமி

தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை டிடிசிபி அங்கீகாரம் பெற ஆறு மாதம் அவகாசம் விரைவில் வழங்கப்பட உள்ளது என்று வீட்டு வசதி மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Update: 2023-07-04 09:45 GMT

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 22 ஊராட்சிகளை சார்ந்த 434 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை டிடிசிபி அங்கீகாரம் பெற ஆறு மாதம் அவகாசம் விரைவில் வழங்கப்பட உள்ளது என்று வீட்டு வசதி மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ரூபாய் 482.36 கோடி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், இத்திட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 பஞ்சாயத்துகளில் குடிநீர் தேவையை முழுவதும் பூர்த்தி செய்யும். அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் திட்டப் பணிகள் நிறைவுறும்.

டாஸ்மாக் மது கடைகளில் டெட்ரா பேக் மூலம் மது வகைகளை விநியோகிப்பது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் 11-ம் தேதி வருகிறது. அதன் முடிவை அடுத்து கர்நாடகா புதுச்சேரி மாநிலங்களில் உள்ளது போல டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படும். இது 99 சதவீதம் பாதுகாப்பானது. கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் ஆராயப்படும். கொடிவேரி அணை அருகே சாயத் தொழிற்சாலை அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

கீழ்பவானி அணைப்பகுதியில் ஏற்படும் மாசு குறித்து கலெக்டர் உரிய ஆய்வு செய்து வருகிறார். பெருந்துறை பேரூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடையே உள்ள பிரச்சினைகளை பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் ரேஷன் கடை, பேருந்து நிழல் குடை, இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். இதன் மதிப்பு ரூபாய் 45 லட்சம் ஆகும். கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா உட்பட பல உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News