சித்தோடு அருகே போலீஸ் எனக் கூறி ரூ.25 ஆயிரம் பணம் பறித்த 5 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போலீஸ் எனக் கூறி மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-10-17 02:45 GMT

கைது செய்யப்பட்ட 5 பேரை படத்தில் காணலாம்.

சித்தோடு அருகே போலீஸ் எனக் கூறி மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் ராமன் பாலக்காடு என்ற இடத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மசாஜ் சென்டருக்குள் நுழைந்த 5 பேர் தங்களை போலீஸ் எனக்கூறி, மசாஜ் சென்டரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக தகவல் வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

பின்னர் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டி, கார்த்திகேயன் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வந்தவர்கள் போலீஸ்காரர்கள் தானா? என்று சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மசாஜ் சென்டரில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கார்த்திகேயனிடம் போலீஸ் எனக்கூறி  மிரட்டி பணம் பறித்த, ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த வசந்தராஜ் (வயது 34), செங்கோடம்பள்ளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 38), லக்காபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32), சூரம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 30), ஆனந்தகுமார் (வயது 38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News