ஈரோடு அரசு மருத்துவமனையில் 4 பேர் சஸ்பெண்ட் கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ஈரோடு அரசு மருத்துவமனையில் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பணியாளர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் முறையாக விசாரிக்காமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஒப்பந்த பணியாளர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் க்யூபிஎம்எஸ் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், காவலாளி, தூய்மை பணிகள், சமைத்தல், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தப் பணியாளர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது சொந்த வேலைகளுக்கும், தாங்கள் வேண்டிய பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வீடியோ, போட்டோ எடுத்து சமூக வெளியில் விடுவதால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு மாதம் ஒரு சிக்கல் எழுந்து வருகிறது.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக விசாரித்து, தவறு செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களை விட்டுவிட்டு, ஒப்பந்த பணியாளர்கள் மீது பணியிடை நீக்கம், பிற அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம், நிரந்தர பணி நீக்கத்துக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பணிகளை முறையாக செய்யாததாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒப்பந்த பணியாளர்கள் சண்முகம், வேலுசாமி, பிரகாஷ், பூங்கொடி ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுபற்றி விளக்கம் தெரிவிக்கவும், தங்களிடம் முறையாக விசாரிக்காமல் நடவடிக்கை எடுத்ததாக கூறி, உறைவிட மருத்துவர் சசிரேகா அறைக்கு நேற்று முன்தினம் சென்றனர். அவரை சந்திக்க இயலாததால், அறைக்கு வெளியே விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் வேலுசாமி என்பவர் திடீரென மயக்கம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.