ஈரோட்டில் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்த மோசடி வழக்கில் 3 பேர் கைது
ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை ஏமாற்றி மோசடி செய்து அபகரித்ததாக மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை ஏமாற்றி மோசடி செய்து அபகரித்ததாக மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த 2023ல் ஈரோடு கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்த சண்முக ராமசாமி (வயது 72) என்பவரிடம் ரூ.3 கோடி கடனாக பெற்றார்.
இதற்கு ஈடாக தன்னிடம் மொடக்குறிச்சியில் இருந்த 9 ஏக்கர் 66 சென்ட் மற்றும் 95 சென்ட் நிலத்தை சண்முக ராமசாமிக்கு கிரயம் மற்றும் வெள்ளோடு கனகபுரத்தை சேர்ந்த சிவசம்பு (வயது 64) என்பவருக்கு பொது அதிகாரம் அளித்துள்ளார். துவக்கத்தில் வாங்கிய கடனுக்கு முறையாக ரத்தினசாமி கடன் செலுத்தினார்.
தேர்தல் நேரத்தில் சரிவர கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் 95 சென்ட் நிலத்தை சிவசம்புவின் மனைவி நாகேஸ்வரி மற்றும் சண்முக ராமசாமி பெயரில் கிரயம் செய்தது தெரியவந்தது.
தன்னிடம் தெரிவிக்காமல் போலியாக வாழ்நாள் சான்று கொடுத்து கிரயம் செய்தது உறுதியானது. இதில் 30 சென்ட் நிலத்தை சக்தி கணேஷ், சண்முக ராமசாமி மகன் யோக மூர்த்தி பெயரில் கிரயம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ரத்தினசாமி,ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் அளித்தார்.
இப்புகாரை, தொடர்ந்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோசடி செய்ததாக சண்முக ராமசாமி, சிவ சம்பு, நாகேஸ்வரி, சக்தி கணேஷ், யோகமூர்த்தி, அவல் பூந்துறையை சேர்ந்த பத்திர எழுத்தர் சங்கர நாராயணன் உள்ளிட்ட 8 பேர் மீது ஏமாற்றி மோசடி செய்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில், நேற்று சண்முக ராமசாமி, சிவசம்பு மற்றும் சங்க நாராயணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏமாற்றி மோசடி செய்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைதான சங்கர நாராயணன் மீது ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு நிலுவை யில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.