ஆப்பக்கூடல் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.;
தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆங்காங்கே லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் போலீசார் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி, ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு வெள்ளைத்தாளில் எழுதி பரிசு விழும் என கூறி பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் 3 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு வருவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு திங்கட்கிழமை நேற்று (26-ம் தேதி) தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மூன்று பேர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆப்பக்கூடல் ஆ.புதுப்பாளையத்தை சேர்ந்த மணி (50), குமாரபாளையம் சி.என்.பாளையத்தை சேர்ந்த குமார் (33), குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்த ராஜ்குமார் (45) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 11 வரிசை எண் கொண்ட ஒரு வெள்ளை சீட்டை பறிமுதல் செய்து, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சித்தோடு பகுதியை சேர்ந்த தனசண்முகமணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.