கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பேரூராட்சி தலைவர் உட்பட 3 பேரை போக்சோவில் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது;
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் மகனுக்கு உதவிய பேரூராட்சி தலைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே நஞ்சை கொளாநல்லி பகுதியை சேர்ந்தவர் 16 வயது நிரம்பிய 10ம் வகுப்பு மாணவி. இவருடன் கருமாண்டாம்பாளையத்தை 18 வயது நிரம்பாத சிறுவன் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். இதில் 10ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து, மாணவி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர், மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன், அவரது தந்தை விஜயன், தாய் கவுரி, பள்ளி ஊழியர் சிவகாமி, கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதா ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவனின் பெற்றோரான விஜயன், கவுரி, பேரூராட்சி தலைவர் அமுதா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுவன், பள்ளி ஊழியர் சிவகாமி ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.