ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது: 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மீட்பு

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் கொள்ளை போன வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-07-09 00:45 GMT

கைது செய்யப்பட்ட சத்யன், அருண்குமார், விக்னேஷ்.

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் கொள்ளை போன வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ.காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஆடிட்டர். இவரது மனைவி சாதனா. இருவரும் கடந்த ஜூன் 8ம் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு தேனியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.

அன்றிரவு ஆடிட்டர் சுப்பிரமணியின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 235 பவுன் நகை மற்றும் ரூ.48 லட்சத்தை கொள்ளையடித்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.


இந்தநிலையில் ஆடிட்டர் சுப்பிரமணியனின் கார் டிரைவரான ஈரோடு திண்டல் காரப்பாறை மெடிக்கல் நகரை சேர்ந்த சத்யன் (வயது 34) என்பவர் தலைமறைவானார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சத்யனை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆடிட்டர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இவருடன் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஆலப்பள்ளி ரோடு திருமலை நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 36), வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோடி குப்பம் ஆர்.கொள்ளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரனின் மகன் விக்னேஷ் (வயது 24) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருண்குமார். விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மற்றும் கொள்ளை அடிக்க பயன்படுத்திய கார் பெங்களூரில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து கொள்ளைக்கு உடந்தையாக இருந்த நபர்களை பிடித்துள்ளோம். கொள்ளையில் நேரடியாக ஈடுபட்ட நபர், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி உள்ளார். விரைவில் அவரையும் பிடித்து விடுவோம் என்றனர்.

Tags:    

Similar News