ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 2,866 பேர் தபால் வாக்குப்பதிவு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 2,866 பேர் தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-04-09 01:00 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக முதல் தளத்திலுள்ள தபால் வாக்கு சீட்டுகள் பாதுகாப்பு வைப்பறையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வைத்து அறையானது மூடி சீலிடப்பட்டது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 2,866 பேர் தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 21,805 எண்ணிக்கையில் 85 வயதுக்கு மேற்பட்டோரும், 9,824 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இவர்களுக்கு தபால் மூலம் வாய்ப்பு அளிப்பதற்கு ஏதுவாக படிவம் 12டி வழங்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 6 தொகுதியிலிருந்து தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 2,201 எண்ணிக்கையில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடமிருந்தும் 800 மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடமிருந்தும் மொத்தமாக 3,001 படிவம் 12டி பெறப்பட்டது.

வாக்காளர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் சார்பில் வாக்கு சேகரிக்கும் குழு அவர்களது முகவரிக்கு கடந்த ஏப்ரல் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிப்பதற்காக மொத்தம் 64 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சேகரித்தனர். இதில் மொத்தம் 2, 843 பேர் தபால் வாக்கு அளித்தனர்.

மேலும், தபால் வாக்கு செலுத்தாமல் விடுபட்டவர்களிடம் இறுதி வாய்ப்பாக வாக்கு சேகரிக்கும் பணி நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், குமாரபாளையம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 18 வயதானவர்களும், 5 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 23 பேர் வாக்களித்தனர். இதுவரை மொத்தம் 2,866 பேர் தபால் வாக்கு அளித்து உள்ளனர். விருப்பம் தெரிவித்தவர்களில் 135 பேர் வாக்களிக்கவில்லை. எனவே ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் விண்ணப்பித்து இருந்த 3,001 பேரில் 95.5 சதவீதம் பேர் தங்களது ஜனநாயக கடமையை வீடுகளில் இருந்தே நிறைவேற்றினர்.

தொடர்ந்து, பெறப்பட்ட தபால் வாக்குகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த அறைக்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று (8ம் தேதி) சீலிடப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார். மேலும், தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News