ஈரோடு மாவட்டத்தில் 233 மெட்ரிக் டன் விதைகள் கையிருப்பு: அதிகாரிகள் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 233 மெட்ரிக் டன் விதைகள் கையிருப்பு உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
ஈரோடு மாவட்ட வேளாண் அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 25.08.2023 முடிய 301.78 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 81.55 அடியாகவும், 16.52 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளது.
நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 194 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 18 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 10 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 11 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 2936 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 4006 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2671 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 13961 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.
2023-24-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டுவந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேளாண்மைத்துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவி பயிர்சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சியடைந்து அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்முதல் செய்யும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அறுவடையைப் பொறுத்து இன்று முதல் தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது.
கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான இதர இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளனர்.