தாளவாடியில் பறிமுதல் செய்த பணத்தை பிரித்துக் கொண்ட 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
தாளவாடியில் சீட்டாட்டக் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.3 லட்சத்தை பிரித்து கொண்ட 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.;
தாளவாடியில் சீட்டாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.3 லட்சத்தை பிரித்து கொண்ட 2 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வெங்கடசாமி என்பவர் பணிபுரிந்து வந்தார். இதே, காவல் நிலையத்தில் சிறப்பு பிரிவு தலைமைக் காவலராக இளங்கோவன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இருவரும் சமீபத்தில் தாளவாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு ஒரு சீட்டாட்டக் கும்பலை சுற்றி வளைத்தனர். அந்த கும்பலில் சிலர் தப்பி ஓடிய நிலையில், அவர்களில் சிலரைப் பிடித்த போலீசார் சீட்டாட்டத்திற்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் தப்பிவிட்டனர்.
பின்னர், பறிமுதல் செய்த பணத்தை அவர்களே பங்கிட்டு கொண்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
முதற்கட்ட விசாரணையில் சீட்டாட்ட கும்பலிடம் இருந்து பணம் பறித்தது உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடசாமி, சிறப்பு பிரிவு தலைமைக் காவலர் இளங்கோவன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டார்.