சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கோபியைச் சேர்ந்த 17 பேர் காயமடைந்தனர்.;
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கோபியைச் சேர்ந்த 17 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்த 21 பேர் கர்நாடக மாநிலம் கொள்ளோகால் அருகே உள்ள நொக்காரில் துக்கம் விசாரிப்பதற்காக சுற்றுலா வேனில் நேற்று காலை சென்றனர்.
இந்த வேனை கோபியை சேர்ந்த சரவணன் (வயது 44) என்பவர் ஒட்டினார். துக்கம் விசாரித்து விட்டு மீண்டும் அவர்கள் கோபிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையில் 14வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 17 பேர் காயம் அடைந்தனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பள்ளத்தில் இறங்கி விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.