பவானிசாகர் அணையில் இருந்து 1,455 கன அடி நீர் திறப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 69.67 அடியாக உயர்ந்து, 70 அடியை நெருங்கி வருகிறது.
பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 69.67 அடியாக உயர்ந்து, 70 அடியை நெருங்கி வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். இந்த அணை ஈரோடு மாவட்ட மக்கள் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
நேற்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 712 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,319 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 69.52 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 69.67 அடியாக உயர்ந்து 70 அடியை நெருங்கி வருகிறது. அதேபோல், நீர் இருப்பு 10.75லிருந்து 10.81 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து பாசனத்திற்கு அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 750 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி, குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,455 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.