ஈரோடு மாவட்டத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இன்று (11ம் தேதி) ஆயுத பூஜை கொண்டாடினர்.

Update: 2024-10-11 10:45 GMT

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தலைமையில் பணியாளர்கள் ஆயுதபூஜை கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இன்று (11ம் தேதி) ஆயுத பூஜை கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் இன்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் தொழிலில் உறுதுணையாக இருக்கக்கூடிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பூஜை மற்றும் வழிபாடு செய்து கொண்டாடப்படுவது வழக்கம்.


அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியக் கூடிய ஓட்டுநர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர்கள் தங்களது வாகனத்தை கழுவி சுத்தம் செய்து, அதற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து மாலை அணிவித்து, வாழைமரம் கட்டியும், ஸ்ட்ரெச்சர் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்து தேங்காய் பழம் உடைத்து இறைவனை வேண்டி வழிபாடு செய்தனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தலைமையில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில் ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் வாகனங்களுக்கு பூ மாலை அணிவித்து, பொரி, வாழைப்பழம் படைத்து, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.


இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆயுதபூஜை கொண்டாடினர். மேலும், எந்த பிரச்சனையும் இன்றி நாள் தோறும் வாகனங்கள் நன்றாக ஓட வேண்டும் என இறைவனை வேண்டி பூசணிக்காயில் சூடம் ஏற்றி வாகனங்களுக்கு திருஷ்டி கழித்து பூசணிக்காயை உடைத்தனர்.

Tags:    

Similar News