திண்டுக்கல்லில் புகார் பதிவு மையம்: அமைச்சர் பெரியசாமி திறப்பு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த புகார் சேவை மையத்தை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த புகார் சேவை மையத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த புகார் சேவை மையம் துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா.பூங்கொடி தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த புகார் சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த புகார் சேவை மையம் இன்று(05.06.2023) முதல் சிறந்த தொழில்நுட்பத்துடன் (Audio Recording, video Recording, Text message Compliant System) விரிவுபடுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும். மேற்குறிப்பிட்ட உள்ளாட்சி பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பொது சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் மற்றும் பாதாள கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகளுக்கு இதன் மூலம் தீர்வு காணலாம்.
இதன்படி பொதுமக்கள் 842 842 0666-என்ற எண்ணிற்கு புகார் செய்தால் புகார்கள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு (Audio Recording) பதிவு செய்யப்படும். ஒவ்வொரு புகாரும் பதிவு செய்யப்பட்டவுடன், அதன் விவரமும் மற்றும் அதன் ஒலிப்பதிவும், தொலைபேசி எண், புகார் எண் ஆகியவை சம்பந்தப்பட்ட அரசு உயர் அலுவலர்களுக்கும் மற்றும் புகார் அளித்தவருக்கும், அதாவது இருவருக்கும் குறுஞ்செய்தி வழியாக தகவல் பரிமாற்றம் செய்யப்படும்.
இதன் மூலம் அரசு உயர் அலுவலர் மற்றும் புகார் அளித்தவர் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, புகாரினை விரைவாக தீர்க்கும் வகையில் இந்த ஒருங்கிணைந்த புகார் சேவை மையம் செயல்படுத்தப்படுகிறது.
புகார்கள் சரிசெய்யப்பட்டவுடன் பொதுமக்கள் தங்களுக்கு வரும் தானியங்கி அழைப்பிற்கு (Automatic Call) எண்:1-ஐ அழுத்தினால் புகார் தீர்வு செய்யப்படவில்லை என கருதப்பட்டு, அந்த புகார் தீர்வு செய்யப்படும் வரை நிலுவையில் இருக்கும் வகையில் சிறந்த தொழில் நுட்பத்துடன் இந்த மக்கள் சேவை மையம் (புகார் மையம்) செயல்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்களின் ஒப்புதல் பெற்ற பிறகே புகார்கள் அனைத்தும் தீர்வு பெற்றதாக கருதப்படுகிறது. இந்த புகார் மையம் 24 x 7 மணி நேரமும் (24 x 7 Call Centre) 12 பணியாளர்களை கொண்டு, முழு நேரமும் இயங்கும் வகையில் 3 பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கண்காணிப்பு அலுவலராக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த சேவையை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்
விழாவில், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வரி, மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.