வாராஹி அம்மன் கோயில் ஆடி மாத பவுர்ணமி விழா உள்ளிட்ட திண்டுக்கல் செய்திகள்
வாராஹி அம்மன் கோயில் ஆடி மாத பவுர்ணமி விழா உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டி புனித உத்ரிய மாதா சர்ச் திருவிழா சப்பர பவனியில் திரளான கிறிஸ்தவ பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி, முன்னதாக ஜூலை 12-ஆம் தேதி நவநாளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, சனிக்கிழமை இரவு உத்திரமாதா மின் ரத ஊர்வலம் மேளதாள வாத்தியம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, வானவேடிக்கையுடன் நடைபெற்றது. தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை ஆலயத்தில் இருந்து இருந்து தொடங்கிய அன்னையின் சப்பர பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் காணிக்கை வழங்கி பிரார்த்தனை செய்தனர்.
இதில், சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கொசவபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் பாமா ருக்மணி வேணு ராஜ கோபால சுவாமி கோயிலில், உள்பிரகாரத்தில் அமைந்துள்ள வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் யாகசாலை அமைக்கப் பட்டு ,வாராஹி அம்மனுக்கு திருமஞ்சனம்,பால்,தேன், பழம்,சந்தனம், தயிர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.
தொடர்ந்து,மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.