வாணியாறு அணை நிரம்பியது: விரைவில் திறக்க வாய்ப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள வாணியாறு அணை நிரம்பி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன்மலை அடிவாரத்தில், வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் உயரம் 65 அடியாகும். அணைக்கு ஏற்காடு மலை பகுதியில் இருந்து வரும் மழைநீரை மையமாகக் கொண்டு, அணை கட்டப்பட்டுள்ளது.
வாணியாறு அணையில் தண்ணீர் நிரம்பினால் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் வழியாக வெங்கடசமுத்திரம், மெனசி, பூதநத்தம், பறையப்பட்டி, தென்கரைக்கோட்டை, ஓந்தியம்பட்டி மற்றும் அதிகாரபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஏரிகளில் நீர் நிரப்பி, சுமார் 10 ஆயிரத்து 517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
ஏற்காடு மலையில் பெய்கிற மழையால், வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்பு 44 அடியில் இருந்து 10 அடியாக உயர்ந்து, தற்போது 58அடியாக உள்ளது. மேலும் ஏற்காடு மலைப்பகுதியில் தொடர்ந்து நீர் வருவதின் காரணமாக வாணியாறு அணையின் நீர்மட்டம் உயருவதால், வாணியாறு அணை பாசன விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.