தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பியது: பொதுமக்கள் பூஜைசெய்து வழிபாடு
இரண்டாவது முறையாக நிரம்பிய தென்கரை கோட்டை ஏரியின் உபரி நீரை பூஜை செய்து இனிப்பு வழங்கி கிராம மக்கள் வரவேற்றனர்.;
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தென்கரை கோட்டை ஏரி சுமார் 84- ஏக்கர் பரப்பளவு மற்றும் 23 ஏக்கர் நீர்ப்பிடிப்பு கொண்ட ஏரி ஆகும். இந்த ஏரிக்கு வாணியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் ஓந்தியாம்பட்டி ஏரியின் உபரிநீரின் தண்ணீர் மூலம் நிரப்பப்படுகிறது.
இதனால் ஜம்மணஹள்ளி ஏரி, ஆலமரத்துப்பட்டி ஏரி,நாகப்பட்டி ஏரி,சின்னாங்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏரியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் வாணியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வினாடிக்கு 340- கனஅடி தண்ணீர் உபரி நீராக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரமாக தென்கரை கோட்டை ஏரிக்கு வினாடிக்கு 40- கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் தற்போது ஏரி முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் இதனை தென்கரை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.விஜயா சங்கர், துணை தலைவர் சென்றிலா சிலுவை நாதன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கல்யாண ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் குமரவேல் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் பூஜை செய்து மலர்களை தூவி உபரி நீரை வரவேற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் இந்த தண்ணீர் ஜெலகண்டேஸ்வரர் கருட விஜயன் ஆற்றின் வழியாக ஆலமரத்துப்பட்டி, கொளகம்பட்டி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் இதே ஆண்டில் ஜனவரி மாதம் தென்கரைகோட்டை ஏரி நிரம்பியது. தொடர்ந்து இந்தாண்டு இரண்டு மாதம் முன்னதாகவே ஏரி நிரம்பி உள்ளதால் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.