வேப்பிலைப்பட்டியில் மண் கடத்தல் - அதிகாரிகள் உடந்தை என புகார்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேப்பிலைப்பட்டியில், அதிகாரிகளின் துணையோடு மண் கடத்தல் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்தி ரெட்டி ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேப்பிலைப்பட்டி மயான அருகே நீர்ஓடை பகுதி உள்ளது. இந்த ஓடையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. மழை வடிகால் நீர் வருவதை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே அப்பகுதியில் இரண்டு சிறிய தடுப்பணைகள் உள்ளன.
இதனிடையே, கேத்துரெட்டிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கல்பனா, அவரது கணவர் சம்பத் கடந்த 4 நாட்களாக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மணல் மற்றும் கிராவல் (நொரம்பு மண்) ஆகியவற்றை நூற்றுக்கும் மேற்பட்டலோடுகள் ஏற்றிச் சென்றதாகவும், அவற்றை கள்ளச்சந்தையில் விற்று வருவதாகவும், அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தகவல் கொடுத்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் ஆவேசமடைந்து, நேற்று சம்பவ இடத்திற்கு ஒன்று கூடி, கனிம வளத்தை கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மணல் எடுப்பதால், நீர் நிலைகள் வற்றி கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
எனவே, மண் வளத்தை சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, குற்றம் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.