இலவச மின் இணைப்பு வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய ஆய்வாளர் கைது
தர்மபுரி அருகே இலவச மின் இணைப்பு வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், கம்பை நல்லூர், வெதரம் பட்டி புதூரை சேர்ந்தவர் முருகன், விவசாயி . இவர் 2013ல் விவசாய கிணற்றுக்கு இலவச மின்சாரம் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், கடத்தூர் மின் கோட்ட அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றும் தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டையை சேர்ந்த வேடியப்பன், வயது 39. இணைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் விவசாயி முருகன் ரூ.15 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார்.
அதன்படி முதல் தவணையாக 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கவும் ஒப்புக்கொண்டு,லஞ்சம் தர விரும்பாத முருகன், தர்மபுரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் இமானுவேல் ஞானசேகர், காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, நேற்று காலை விவசாயி முருகனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட விவசாயி முருகன் முதல் மின் வாரிய அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளர் வேடியப்பனிடம், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் இம்மானுவேல் மற்றும் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வேடியப்பனை பிடித்து கைது செய்தனர்.