பாரதமாதா ஆலயத்தை திருக்கோயில் என மாற்றாவிட்டால் போராட்டம் - அண்ணாமலை
பாப்பாரப்பட்டியிலுள்ள பாரதமாதா ஆலயத்தை திருக்கோயில் என மாற்றாவிட்டால் அறப்போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;
பாஜக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தர்மபுரி டி.என்.ச.மஹாலில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் பாஸ்கர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மாவட்ட பொதுச்செயலாளர்கள் சரவணன், வெங்கட்ராஜ், கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியாருக்கு முன்பே, சமூக நீதிக்காக பாரதியார், வ.உ.சி போன்றவர்களும் பாடுபட்டுள்ளனர். அவர்களை இருட்டடிப்பு செய்யாமல், வெளிக்காட்டுங்கள் என கூறுகிறோம்.
பாப்பாரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா ஆலயத்திற்கு, பாரத நினைவாலயம் என வைத்து வரலாற்று பிழையை தமிழக அரசு செய்துள்ளது. அதை பாரத மாதா திருக்கோயில் என மாற்ற வேண்டும். ஒரு மாதத்திற்குள் பெயர் மாற்றவில்லை என்றால், பாஜக சார்பில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.