பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-23 14:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு ஏற்காடு மலைப் பகுதிகளில் வரும் தண்ணீர் முக்கிய நீராதாரமாக உள்ளது. வாணியாறு அணையின் அதிகபட்ச நீர்ப்பிடிப்பு கொள்ளளவு உயரம் 65.27 அடியாகும்.

கடந்த சில மாதங்களாக பெய்த பருவ மழையின் காரணமாக வாணியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 64 அடியாக உயர்ந்துள்ளது. வாணியாறு அணை நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து சுமார் 100 கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது வாணியாற்றின் வழியாக செல்கிறது.

ஏற்காடு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால் வாணியாறு அணைக்கு வினாடிக்கு சுமார் 120 கன அடி வீதம் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால், வாணியாறு அணையில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

வாணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியாற்றின் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பினால் சுமார் 10, 517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும். இதைத்தவிர, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் பிரச்னைகள் தீரும்.

வாணியாறு நிரம்பி, அதன் உபரி நீர் வெளியேறும் நிலையிலும், பழைய ஆயக்கட்டு பகுதியிலுள்ள ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். அதாவது, ஆலாபுரம் ஏரியில் மீன் வளர்க்கும் குத்தகைதாரர்களின் நலனுக்காக ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என அங்குள்ள பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே, வாணியாற்றின் உபரிநீரை பயன்படுத்தி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வறண்டு கிடக்கும் ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News